ஒரு டைரியின் கதை சில நினைவு துகள்கள்


ஒரு டைரியின் கதை – முதல் பக்கம்

எழுத்துபிழையின்றி எழுதுதல் கடினம் தான் இருந்தும் எழுதிட தான் ஆவல். சில உணர்வுகளை நினைவுகளாய் உருமாற்ற உற்ற தோழனாய் டைரி மட்டுமே தோன்றுகிறது. இதழ் திறக்காமல் புன்னகைத்து, கண்ணீர் வழியாமல் அழுத தருணங்களை பதிவு செய்தாக வேண்டும் அல்லவா?. இதய கூட்டின் இன்னோரு சேமிப்பு வங்கி டைரி. இதோ வார்த்தைகள் முட்டி மோதுகின்றன யார் முதலில் காகிதம் படர்வோம் என்று. ஒவ்வோரு நாளும் தினமும் தவறாது நிரம்பும் எனது டைரியின் பக்கங்கள். வலிகளை வரிகளில் கடத்தும் முயற்சியும் செய்வேன். டைரியின் எழுத்துக்கள் சுவாசிக்கும், வரிகளில் இதயத்தை போன்ற துடிப்பிருக்கும்.

நான் யார்?

எனக்குள்ளே தினமும் தோன்றிவிடுகிறது நான் யார்? என்ற கேள்வி. எனக்குள் இரட்டை வாழ்க்கை உண்டு. ஒன்று உங்களில் ஒருவனாய். இன்னோன்று எனக்கு மட்டுமே பிடித்தமானவனாய். கனவுகளை காட்சிப்படுத்தி கொண்டவன். எல்லையற்றவன். வெளியில் நிற்பவன் வாழ போராடுகிறான் உள்ளிருப்பவன் தினம் ஒரு சுகவாழ்க்கை வாழ்ந்துவிடுகிறான் காகித புணர்ச்சியில். உறக்கத்தில் கூட தாய்ப்பால் போன்ற பரிசுத்தமான கனவுகள் வரும். தொடர்கிறது விடை இல்லாத வினாவாக நான் யார்? என்பது. நிகழ்காலம் எதையேனும் உணர்த்தலாம் அல்லவா?

மழை

என்னுடைய வகுப்பறை கூரையை விட்டு அழகாய் அத்துமீறும் ஆர்பரிக்கும் மழைச்சாரல். சிதறிய துளிகளில் உடல் எங்கும் கூசும். நிதானம் கொண்டு மழையை இமைக்காது ரசித்திருப்பேன். தேங்கும் நீருக்கு வாய்க்கால் இடுவதும், என்னுடைய காகித கப்பலை தடையில்லாமல் கடத்துவதும் மழை நாள் கடமை எனக்கு. ஈரமான உடலோடு வீடு திரும்பி மறுநாள் காய்ச்சல் கண்ட கதைகளும் உண்டு. காய்ச்சல் கண்ட என்னை மடியில் கிடத்தி மாறி மாறி பத்திட்டு வெப்பம் சோதிக்கும் போது எல்லாம் என் நெற்றியில் தாயின் இதமான முத்தம் கண்டு உள்ளே சிரித்து கொண்டேன். எத்தனை அழகான அரவணைப்பு மழைக்கு நன்றி! என்னுடைய அனைத்து படைப்பிலும் அனுமதியின்றி நுழையும் மழையும் காதலும். பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓர மழையின் அழகில் கரைந்திருக்கிறேன். அடர்ந்த மழையில் படர்ந்த சாலையில் ஒற்றையாய் உள்ளம் குளிர நடந்திருக்கிறேன் மழையோடு கரம் பிடித்து. நள்ளிரவு மழையை கூட உறக்கமின்றி ரசித்திருக்கிறேன்.

பள்ளி தோழர்கள்

உலகம் அன்னியப்பட்ட காலம். எதிலும் ஏராளமான கேள்விகள். பல கேள்விகளுக்கும் பதிலே கிடைக்காது அன்று. எனக்கான பதிலை நானே நிரப்பி கொள்வேன். மூன்று தோழன் இரண்டு தோழிகள் என்னுடைய நட்பு வட்டாரம். ஒரே வகுப்பறை ஒரே தெரு என்பது பல வருட தொடர்புக்கு காரணம். பழைய அரசு மருத்துவமனைக்கு பின்னால் ரகசியமான எங்களுடைய சின்ன மருத்துவமனை. ஆறு பேரில் தினமும் ஒரு டாக்டர் ஐந்து நோயாளிகள் சுழற்சி முறையில். நாள் தவறாது நடக்கும் ஓணான்களுக்கு அறுவை சிகிச்சை. ஆணுறைகளில் பலூன்கள் தயாரிப்பதும், அனாதையான நாய்களுக்கு ஆதரவளிப்பதும் எங்களின் முதல் விளையாட்டு. அம்மா, அப்பா விளையாட்டில் தான் பகை வரும் அப்பா பதவிக்கு. சில நாட்களுக்கு பிறகு மீண்டும் சிரித்து கொள்வோம். கரங்கள் இணைத்து கொள்வோம். கிணற்று குளியல், வாய்க்கால் மீன்கள், களிமண் கோயில்கள், சேற்று நீர் விளையாட்டு, தவளை வேட்டை, தென்னங்குச்சி அம்புகள், தினந்தந்தியில் பட்டம், இடிந்த கோயில், கள்ளிச்செடி காதலர்கள், சில்லறை திருட்டு, மிளகா தூள் மாங்காய், அரசு சீருடை, புது புத்தகத்தின் வாசம், மயில் இறகுகளின் செயற்கை இனப்பெருக்கம், தென்னை மட்டை கிரிக்கெட். ஒரு ரூபாய் பாட்டு புத்தகம், அப்பாவின் கிழிந்த பர்ஸ், நான் எழுதிய முதல் கதை கல்மனிதனை ஐந்தாம் வகுப்பு முழுவதுமாக ரசித்தது. என பதிவுகள் எத்தனை ?

இது தான் காதலா?

தன்னை சுற்றிய சூழல் மறந்து இரண்டு விழிகளுக்கும் ஒற்றை தேடல் ஏற்படுகிறது. இத்தனை பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள். எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. எப்பொழுதாவது திரும்புகிறது அவள் பார்வை அதற்காகவே தவமிருக்கிறது விழிகள். அவள் என்னை தாண்டும் சமயம் இதயம் எகிறி குதித்தோடும் அவள் பின்பு. பெறுபவர் இல்லாது வீசி எறிந்த கடிதங்கள் ஆயிரம். ஒற்றை எழுத்தோடு தவம் இருந்த கடிதங்கள் எத்தனை ?நிலை கொண்ட பயத்தால் ஒரு பக்க கதையானது காதல். அவள் வீட்டு சாலைகளுக்கு தெரியும் எனது கால்களின் இடைவிடாது உழைப்பு. காதல் கண் சிமிட்ட காத்திருக்கும் இமைப்பறவை. தவிர்க்க முடியாத பாலின தூண்டுதல் ஆனால் அழியா நிலை பெற்றுவிடுகிறது இதயக்கூட்டில். ஆண்டுகள் கடந்தும் ஆர்பாரிக்கும் பேரலை அவள். நான் எழுதி கொண்டு இருக்கும் வரையில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாள் என்னவள். ஒரிரு வார்த்தைகள் தான் பேசி இருப்பாள் அத்தனை வருடத்தில் அதையே இன்று வரை அடைகாக்கிறேன்.

மறுபடியும்

ஒருவழியாக பள்ளி காதல் ஒரு தலை காதலாய் கரைந்து விட சில காலம் கடந்து மீண்டும் ஒருத்தி இடம் பெயர்கிறாள் அனுமதியின்றி. சிறுக சிறுக சிதறுகிறது உறுதியான உள்ளம். உட்புகுந்தவளின் உறுதியான அன்பில். இவள் உறவுக்காரி. திருமண விழாவில் கலந்தவள். ஒற்றை பார்வையில் உட்புகுந்தவள். இரண்டு நாள் சந்திப்பில் காதலுக்கு அழைப்பிதழ் அனுப்பியவள். அவளுக்காக தவறாது சென்றேன் அத்தனை திருமணத்திற்கும். தேடலை விதைத்தவள் அவளே. காத்திருப்பை கவிதையாக்கியவள் அவளே. என் மீது படர்ந்த முதல் பெண் ஸ்பரிசம் அவளுடையது. மூச்சு காற்றோடு உறவாடியிருக்கிறேன். அவளது உள்ளங்கை வேர்வை உணர்ந்திருக்கிறேன். அவள் சுவாசம் புரியும், வாசம் தெரியும். அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்வேன். நிலையானது என்பதே நிரந்தரம் இல்லை காதல் வானில். அவளுக்கான காலம் முடிய அவளும் கடந்துவிட்டாள். மேகம் நகரும், வானம் நிலைக்கும் ஏற்பதே நம் கடமை. அவளை நேசித்த காலங்களில் என்னுடைய டைரியின் அனைத்து பக்கங்களிலும் அவள் பெயரே கவிதையாகி கிடந்தது. அவளுக்காகவே எழுதப்பட்ட ஒரு வரி கவிதைகளின் ஆயுள் அதிகம் இன்றுவரை வாழ்கிறது. ஒவ்வோரு எழுத்திலும் வாழ்கிறாள். என்னுடைய அழகான தோல்வி அவள்.

மாற்றம்

காலகடத்தலில் உருவங்களோடு உணர்வுகளும் உருண்டோடியது. எனக்கானவள் ஒருத்தி மனைவியாய் அகம் புகுந்தாள். அத்தனை காதலுக்கும் ஒற்றை உறவாய். எல்லாம் மாறியது என்னையறியாமலே. ஆனால் ஒரு சமயம் இளமையில் இருந்த எழுத்தாளனை மீண்டும் கொண்டு வந்தது அந்த தனிமை. அயல்நாட்டின் தனிமை என் விரல்களுக்கு மையிட்டு கொண்டது. சிந்தனைகளுக்கு சிறகிட்டு கொண்டது. வாசகர்கள் சூழ்ந்த இணையதள உலகம் வசப்பட்டது. கனவுகளுக்கு வண்ணம் கொடுத்து எழுத்தில் வடித்தேன். கடந்த காலத்திற்கு உயிர் கொடுத்தேன். எனக்குள் தேங்கிய உருவங்களுக்கு எழுத்தில் உயிர் அளித்தேன். எழுத்திட்டவனுக்கு முதுமையும் இல்லை மரணமும் இல்லை. காதல் கதைகள் அதிகம் எழுதுகிறேன் ஆமாம் உண்மை தான் அது தானே என்னை உருவாக்கியது. அது தானே நிறைந்திருக்கிறது. நிறைந்தால் வழிவது இயற்கை தானே.

Read more என் முதல் காதலும் காதலியும் நீ இல்லை, ஆனால்!

தவறவிட்ட தருணங்கள்

காதலியோடு ஒரு இரவு பயணம், சில நொடி படர்ந்த காதல் முத்தம், நண்பனின் மரணம், நண்பனின் சகோதரிகளின் வெளியூர் திருமணங்கள், தபால் தலை இல்லாமல் அனுப்பவும், பெறவும்பட்ட பொங்கல் வாழ்த்து அட்டைகள். புது வருட கொண்டாட்டம். சைக்கிள் பயணம். சிகரேட்டின் முதல் ஊடுறுவல். திரை அரங்குகள், நட்சத்திரங்கள் இல்லாத நிலவு, வைரமுத்துவின் கவிதை, நூலகத்தின் அமைதி என அனுபவங்களை ஒவ்வோரு நாளும் சுமந்து நிற்கிறது ஏராளமான டைரிகள். திரும்ப வாசிக்கும் போது எல்லாம் கண்ணீரும், சிரிப்பும் கலந்தே வரும் எனது கடந்த காலடி சுவடுகள் மீது. வாழ்க்கையை ரசித்து கொண்டு வாழ்ந்துவிடுங்கள். முதுமையில் எண்ணி பார்க்க எதையாவது அழகான அனுபவங்களை சேகரித்து கொள்ளுங்கள்!

நன்றிகள்!

வணக்கங்களுடன்!

நான் உங்கள் கதிரவன்!